.comment-link {margin-left:.6em;}

சித்தாள்

கொத்தனார் இங்கேதும் கொத்தி விடுவதற்கு
சித்தாளும் வேண்டுமா சித்தமாய் - சித்தாள்நான்
வந்தனம் சொல்லி வருகின்றேன் கொத்திவிட
சிந்தனை செய்தால் சிறப்பு.

சித்தாளின் வேலை சுமந்தளித்தல் பின்அதைக்
கொத்துவது கொத்தனாராம் கொள்.

கொத்தனார் உண்டிங்கு கொத்திவிட வெண்பா
குத்தனாய் சீவா குறிப்பிருக்க - பித்தனாரும்
ஏத்தும் இராமகி என்றொரு ஏறிருக்க
சித்தாளும் சொல்வதென்ன சொல்.

சந்தம் தவறாமல் சொல்லு மிடமாம்வ
சந்தமாய் உள்ள சிறப்பிடம் - சந்தா
கொடுக்காமல் செந்தமிழ் கற்குமிடம் என்பார்
நடராசன் என்கிறேன் நான்.

வய்யத் துறைவளர் வண்டமிழ் பாட்டொன்று
செய்யத் தகுமோஇச் சித்தாளால் - அய்யய்யோ
எந்தோ பரிதாபம் என்பாட்டும் வெண்பாட்டா
சிந்தனை செய்தால் சிரிப்பு.

சித்தாள் எழுதுவதைச் சீவாவெண் பாட்டெனயோ
சித்தாள் கலைவாணி சிந்தித்தாள் பின்புர
சித்தாள் சினந்தாள் சிறுமைகண் டுப்பரிக
சித்தாள் மிகவே சிரித்து.

வெண்பா இலக்கணம் வேண்டுமென்றார் இன்றவரும்
வெண்பா அரைநொடியில் வார்க்கிறார் - நண்பா
பரிணாமம் பற்றிஅவர் பாடுமப் பாங்கில்
பரிணாம மாற்றத்தைப் பார்.

//பேயன் மகிமையை போற்றிடும் மக்களே
மாயன் மகிமை அறிவீரோ - சீயென்(று)
ஒதுங்குமே ஈசன் வெறும்புகழும் எந்தன்
மதுசூதன் முன்னென்று மொழி

--புயல்--
//

பேயன் மகிமையைப் போற்றுவோம் மக்களே
மாயன் மகிமை அறியீரோ - சீயென்று
ஒதுக்குமே ஈசன் உறும்புகழ் அந்த
மதுசூதன் மாயையை மன்.

மதுசூதன் மாயன் மணிவண்ணன் கற்றான்
மதுசூது மாயை மயக்கம் - பொதுவில்மா
ரீசனுக்கு அண்ணாந்தான் அன்றரி எந்நாளும்
ஈசனுக்கு ஈடில்லை இங்கு.

பிறப்புறுவான் மாயன் பிறருக்கென் செய்வான்
பிறப்பறுப்பான் ஈசன் பணிய - மறுப்பென்ன
ஆயன் அவன்கள்வன் ஏய்த்திடுவான் மண்தின்னும்
மாயனுக்குப் பேயனே மேல்.

//
கடலையாளும் எம்பெருமான் கண்ணசைவே போதும்
சுடலையாளும் உம்பெருமான் ஈடா? - மடத்தனமாய்
பேசாதீர் உம்பித்தன் பெருமையை இல்லையென்றால்
ஏசாது நில்லாதென் நா!
//

கடலையாளும் உம்பெருமான் கண்ணசைய வேண்டும்
சுடலையாளும் எம்பெருமான் சித்தம் - மடத்தனமாய்
பேசாதீர் எத்தன் பெருமையை இல்லையென்றால்
ஏசாது நில்லாது உலகு!

//
கருணைக் கடலென கண்ணனைக் கொஞ்ச
தருணமும் வாய்த்திட வேண்டும் - திருவடி
பற்றித் தொழுதருள் பெற்றிட பார்த்தனின்
வற்றா பாற்கடல் வா!
//
கருணைக் கடலென கண்ணனைக் கொஞ்ச
தருணமும் வாய்த்திட வேண்டும் - திருவடி
பற்றித் தொழுதருள் பெற்றிட ஈசனை
தொற்றப் பொழுதில்லை தொற்று.

கண்ணன் எனப்படுவோன் கள்வனாம் பன்னிரு
கண்ணன் சினமுடையோன் கந்தன் அவன்தனக்
கண்ணன் பெருவயிறன் காப்பானோ இங்கெம்முக்
கண்ணன் கடவுளெனக் கொள்.

இத்தனை நாட்களாய் இங்கிருந்தார் இப்போதோ
மொத்தமாய் எங்கோ மறைந்திட்டார் - பித்தனேசொல்
கொத்தனார் என்பவரை கொண்டுவர உன்தனக்(கு)
எத்தனை நாளாகும் என்று.

ஏறுபோல் இங்கே எழுதினார் நல்வெண்பா
வேறெங்கோ சென்றார்தான் விக்கவே - ஏறெங்கே
இங்கேயும் காணோமே அங்கேயும் காணோமே
எங்கேயாம் போனார் இவர்.

வெண்பாவின் வாத்தியும் வெண்பாவை வார்த்தவரும்
கண்காண வில்லையே கந்தாநின் - வண்டமிழின்
பித்தனாய் சித்தாள் பிதற்றும் படிவைத்த
கொத்தனார் எங்கேயோ கூறு.





Comments: Post a Comment



<< முகப்பு

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org