.comment-link {margin-left:.6em;}

வலைப்பூவும் வைத்த விதம்

மதுமிதா என்பவர் மேற்கொள்ளும் ஆய்விற்
குதவிட நானும் உரைத்தேன் - ஓதக்
கலைமடந்தை வாழ்த்தின்றிக் கல்லாத நானும்
வலைப்பூவும் வைத்த விதம்.

வலைப்பதிவர் பெயர்:
வில்லை வளவனென்பர் வேண்டியவர் வேண்டாதார்
தொல்லைத் தருவனென்பர் தற்காலத் – தொல்லைப்
பயலென்பர் நண்பர் புலவீர் ஃபுளோரைப்
புயலென்பர் மற்றும் பலர்.

வலைப்பூ பெயர் :
வள்ளுவம் நாலடியார் வாகானக் கம்பனும்
தெள்ளிய பாடல் திரட்டெனலாம் - துள்ளிவரும்
என்பாட்டை என்சொல்ல ஏலும் எளிதாக
என்பாக்கள் என்றே இயம்பு.

சுட்டி( url) : http://enpakkal.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: நாடு:
தேடாமல் செல்வம் தருகின்ற நல்லதோர்
நாடாம் அமெரிக்க நாடிதுவே - நாடின்
கடல்தனைக் காணாமற் குன்றிலே யுள்ள
அடலை நகரென் றறி.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
தேடும் பொருளுடனே தந்திடுவார் நாளும்நாம்
நாடும் முடிவுகளை நல்கிடுவார் - ஏடுதனில்
ஏகிடும் எப்பொருளும் எப்போதும் நல்கிடும்
கூகிளார் எந்தன் குரு.

முதல் பதிவு ஆரம்பித்த நாள் ,வருடம் : 07/21/2005

இது எத்தனையாவது பதிவு: 7

இப்பதிவின் சுட்டி( url): http://enpakkal.blogspot.com/2006_06_01_enpakkal_archive.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
சுனைபோலே என்னுள் சுரக்கின்ற பாக்கள்
வினையால் மறந்து விலக - நினைவு
தொலைப்பதை என்றும் தவிர்த்திடவே நானும்
வலைப்பூவும் வைத்த விதம்.

சந்தித்த அனுபவங்கள்:
தமிழென்றார் எல்லாம் தவறென்றார் குப்பைக்
குமிழென்றார் இன்னும் குறும்பாய் – உமிழ்ந்தார்
தெளியென்றார் உண்மைத் தெரியென்றார் வாகாய்
அளியென்றார் அன்பர் அறிந்து.

பெற்ற நண்பர்கள்:
சித்தம் தெளியாது சிந்தனைச் செய்திடா
தெத்தாலும் கூடி இருக்காதே - இத்தகையப்
பண்புடைய பைந்தமிழ்ப் பித்தன்தன் வாழ்விலே
நண்பரு மேது நவில்.

கற்றவை:
கற்றது கைம்மண்ணளவு கல்லாத துலகளவவென்
றுற்ற கலைமடந்தை யோதுவதாய் – கற்றதோர்
மூதாட்டி சொன்னாள் முடியா ததைமறுக்க
ஏதானும் சொல்லாலே யிங்கு.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
எண்ணு மெதையு மெழுதலாம் ஏதையும்
திண்ணமாய்ப் பேசித் திளைக்கலாம் – மண்ணிலே
நன்மையும் தீமையும் நல்கிடும் ஓர்பெரும்
வன்மை உடைத்தே வலை.

இனி செய்ய நினைப்பவை:
தன்னலம் போற்றித் தமிழரை யேய்ப்பவர்
அன்னாரின் எச்ச மறுத்திடப் - பின்னேப்
புறம்பேசு வோரைப் பழிக்கத் தமிழ்கற்
றறம்பாட வேண்டும் இனி.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
நாலிரண்டு சொன்னவனோ நச்சரவம் பூண்டவனை
நூலிலே வைத்ததொரு நாயனனோ - வேல்கொண்டு
வல்லவரை வீழ்த்தும் வளவனோ என்சொல்ல
புல்லொத்த நாயேன் புகழ்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழான உந்தன் திருவாய் மலர்ந்து
தமிழென்னும் ஓர்மொழி தந்தாய் - அமிழ்தம்போல்
இந்த வியவாண்டு இனிதாய் மலரட்டும்
கந்தா அருளைக் கொடு.

செழிப்பான செந்தமிழை சொன்ன முனிவன்
வழிவந்த செந்தமிழர் வாழ்க - மொழியாம்
இமிழாலே நாமிங்கு இணைந்தே இருக்க
தமிழ்தானே என்றும் துணை.

மயக்கும் தமிழினை மற்றவரும் பார்த்து
வியக்கும் படிவளர வித்திடுவோம் - பயந்த
அயரா உழைப்பின் அருமைப் பலனை
வியவாண்டில் பெற்றிட வாழ்த்து.

வியவாண்டில் இன்புற்று விண்ணெட்டும் வண்ணம்
நயம்பெற்று நம்முடைய நண்பர்கள் வாழ்வும்
உயரட்டும் சொன்னேன்நல் வாழ்த்து.

இறக்கட்டும் நம்மை இழித்திடும் செய்கை
பிறக்கட்டும் இந்நாள் புத்தாண்டு வாழ்வும்
சிறக்கட்டும் என்றும் செழித்து.

இமிழ்போல் தமிழால் இராமகி நீயும்
அமிழ்தென வெண்பா அளித்தாய் - தமிழர்
வணங்கும் தமிழாலே வாழ்த்த வயதின்றி
வணங்கினேன் என்னையும் வாழ்த்து.

பல்காப் பியந்தந்த பன்மொழியுந் தோன்றும்முன்
தொல்காப் பியந்தந்த தொன்மொழி - செல்வம்
இமிழ்ந்து பெருவாழ்வை இவ்வுலகம் காண
தமிழே வருவாய் துணை.

சிமிழ்கண்ணின் பேச்சோ சிறுமழலைப் பேச்சோ
அமிழ்தமாய் நெஞ்சில் இனிக்கும் - தமிழர்
வசந்தமாய் வாழ வியவாண்டில் சந்த
வசந்தமே எங்களை வாழ்த்து.

எத்திசைக்கும் ஆண்டவனே எல்லனே எவ்வுயிர்க்கும்
வித்தே பரம்பொருளே வல்லோனே - பித்தனேயென்
அத்தா உனைநானும் அன்புடன் கேட்கிறேன்
புத்தாண்டில் வாழ்த்தும் படி.

கேணி நிறைந்து கதிர்வாழ துப்பாரைப்
பேணிநல் வாழ்வளித்துப் புத்தாண்டில் - வாணி
தமிழ்தந்த வாய்மலர்ந்து தாய்நீயும் வாழ்த்தொன்று
உமிழ்ந்தால் அதில்வாழும் உலகு.

நூறாண்டு காலம்தான் நீவாழ வேண்டுமே
வேறென்ன நானிங்கு வேண்டுவது – பேறுபெற்றேன்
இம்மையில் நான்கண்ட இயவுள் உனைக்காண
அம்மாநீ வாழ்த்தி அருள்.

அள்ள முடியாத அன்பைப் பொழிந்தாயே
உள்ளம் எனச்சொல்வ துன்னுள்ளம் - பிள்ளைநான்
இம்மையும் எம்மையும் உன்னுடனே தானிருக்க
அம்மாநீ வாழ்த்தி அருள்.

முத்தமிழும் நான்பேச மூலமாய் ஆனவளே
புத்தாண்டில் உன்புகழைப் பாடுகிறேன் - எத்தாலும்
நிம்புகழைப் பாட நினைத்தாலும் மாட்டாதே
அம்மாநீ வாழ்த்தி அருள்.

சித்தாள்

கொத்தனார் இங்கேதும் கொத்தி விடுவதற்கு
சித்தாளும் வேண்டுமா சித்தமாய் - சித்தாள்நான்
வந்தனம் சொல்லி வருகின்றேன் கொத்திவிட
சிந்தனை செய்தால் சிறப்பு.

சித்தாளின் வேலை சுமந்தளித்தல் பின்அதைக்
கொத்துவது கொத்தனாராம் கொள்.

கொத்தனார் உண்டிங்கு கொத்திவிட வெண்பா
குத்தனாய் சீவா குறிப்பிருக்க - பித்தனாரும்
ஏத்தும் இராமகி என்றொரு ஏறிருக்க
சித்தாளும் சொல்வதென்ன சொல்.

சந்தம் தவறாமல் சொல்லு மிடமாம்வ
சந்தமாய் உள்ள சிறப்பிடம் - சந்தா
கொடுக்காமல் செந்தமிழ் கற்குமிடம் என்பார்
நடராசன் என்கிறேன் நான்.

வய்யத் துறைவளர் வண்டமிழ் பாட்டொன்று
செய்யத் தகுமோஇச் சித்தாளால் - அய்யய்யோ
எந்தோ பரிதாபம் என்பாட்டும் வெண்பாட்டா
சிந்தனை செய்தால் சிரிப்பு.

சித்தாள் எழுதுவதைச் சீவாவெண் பாட்டெனயோ
சித்தாள் கலைவாணி சிந்தித்தாள் பின்புர
சித்தாள் சினந்தாள் சிறுமைகண் டுப்பரிக
சித்தாள் மிகவே சிரித்து.

வெண்பா இலக்கணம் வேண்டுமென்றார் இன்றவரும்
வெண்பா அரைநொடியில் வார்க்கிறார் - நண்பா
பரிணாமம் பற்றிஅவர் பாடுமப் பாங்கில்
பரிணாம மாற்றத்தைப் பார்.

//பேயன் மகிமையை போற்றிடும் மக்களே
மாயன் மகிமை அறிவீரோ - சீயென்(று)
ஒதுங்குமே ஈசன் வெறும்புகழும் எந்தன்
மதுசூதன் முன்னென்று மொழி

--புயல்--
//

பேயன் மகிமையைப் போற்றுவோம் மக்களே
மாயன் மகிமை அறியீரோ - சீயென்று
ஒதுக்குமே ஈசன் உறும்புகழ் அந்த
மதுசூதன் மாயையை மன்.

மதுசூதன் மாயன் மணிவண்ணன் கற்றான்
மதுசூது மாயை மயக்கம் - பொதுவில்மா
ரீசனுக்கு அண்ணாந்தான் அன்றரி எந்நாளும்
ஈசனுக்கு ஈடில்லை இங்கு.

பிறப்புறுவான் மாயன் பிறருக்கென் செய்வான்
பிறப்பறுப்பான் ஈசன் பணிய - மறுப்பென்ன
ஆயன் அவன்கள்வன் ஏய்த்திடுவான் மண்தின்னும்
மாயனுக்குப் பேயனே மேல்.

//
கடலையாளும் எம்பெருமான் கண்ணசைவே போதும்
சுடலையாளும் உம்பெருமான் ஈடா? - மடத்தனமாய்
பேசாதீர் உம்பித்தன் பெருமையை இல்லையென்றால்
ஏசாது நில்லாதென் நா!
//

கடலையாளும் உம்பெருமான் கண்ணசைய வேண்டும்
சுடலையாளும் எம்பெருமான் சித்தம் - மடத்தனமாய்
பேசாதீர் எத்தன் பெருமையை இல்லையென்றால்
ஏசாது நில்லாது உலகு!

//
கருணைக் கடலென கண்ணனைக் கொஞ்ச
தருணமும் வாய்த்திட வேண்டும் - திருவடி
பற்றித் தொழுதருள் பெற்றிட பார்த்தனின்
வற்றா பாற்கடல் வா!
//
கருணைக் கடலென கண்ணனைக் கொஞ்ச
தருணமும் வாய்த்திட வேண்டும் - திருவடி
பற்றித் தொழுதருள் பெற்றிட ஈசனை
தொற்றப் பொழுதில்லை தொற்று.

கண்ணன் எனப்படுவோன் கள்வனாம் பன்னிரு
கண்ணன் சினமுடையோன் கந்தன் அவன்தனக்
கண்ணன் பெருவயிறன் காப்பானோ இங்கெம்முக்
கண்ணன் கடவுளெனக் கொள்.

இத்தனை நாட்களாய் இங்கிருந்தார் இப்போதோ
மொத்தமாய் எங்கோ மறைந்திட்டார் - பித்தனேசொல்
கொத்தனார் என்பவரை கொண்டுவர உன்தனக்(கு)
எத்தனை நாளாகும் என்று.

ஏறுபோல் இங்கே எழுதினார் நல்வெண்பா
வேறெங்கோ சென்றார்தான் விக்கவே - ஏறெங்கே
இங்கேயும் காணோமே அங்கேயும் காணோமே
எங்கேயாம் போனார் இவர்.

வெண்பாவின் வாத்தியும் வெண்பாவை வார்த்தவரும்
கண்காண வில்லையே கந்தாநின் - வண்டமிழின்
பித்தனாய் சித்தாள் பிதற்றும் படிவைத்த
கொத்தனார் எங்கேயோ கூறு.

உணர்வுகள்

ஊரடலை வாயிற் வழங்குமொழி செந்தமிழ்
பார்புகழும் மென்பொருள் பாத்திரமாம் – பாரதனி
லெல்லா மறிந்த அவையோர் தமக்கதிகங்
கல்லாதா னின்வணக்கங் கள்.

வெண்பா வெழுதலா மொன்றுந் தெரியாதே
யெண்ண மிருக்கு தெழுதிட – நண்பர்கள்
சொல்லித்தந் தாலெழுதச் செய்வேனன் போடழைத்த
எல்லார்க்கும் நன்றிசொல் லி.

வெண்பா யெழுதுவதாய் வெங்காயஞ் சொல்லவோ
ரெண்ண மெழுந்ததென் னுள்ளேதான் - மண்போற்றுஞ்
செந்தமிழில் வெண்பா சிறப்பதைப் பார்த்திங்கு
வந்தனஞ் சொல்லவந் தேன்.

அரைநொடியில் பாட்டு மெழுதிடலாங் கங்கு
கரையில்லாச் செந்தமிழைக் கொண்டு – விரைவாக
என்போலே யுள்ளோர்க் கெளிதாகச் சொல்லுங்கள்
வெண்பாவுக் கென்ன விதி.

எல்லோர்க்கும் நன்றி எடுத்தெனக்குச் சொன்னதற்
கெல்லாவெண் பாவு மிருக்கணுமா நாலுவரி
கல்லாதா னிஞ்சந்தே கம்.

நான்காம் வரியிலே நான்கு பெரியசொல்
ஆங்கே வருவது அபத்தமா ஆசையாய்
நான்கா டுவாழும் நந்திமேல் வீற்றானை
பாங்காக வைத்தொரு பாட்டையும் நன்றாக
நான்குவரி மேலெழுதி னால்.

மிரண்டோடச் செய்யும் மிகுந்த விதிகள்
இரண்டாம் வரியின் இறுதிச்சொல் லுக்கு
பொருந்தா முதற்சொல்லும் பெற்றிவ் விதிக்கு
முரணாய் குறுகோடு மில்லாது பாட்டொன்று
இருந்தால் அதுதவறா அப்பாட்டில் தப்பாது
இருந்திடு மேயின் னிசை.

தடுக்காத செந்தமிழின் தாயென்னும் வாணி
அடிப்போற்றி நாயேன் அடியேன் - படிப்பறிவு
இல்லாம லிதுநாள் வரைநான் எழுதியது
எல்லாம்வெண் பாயில்லை யா.

விலகாத ஓசை விதிதவறா வண்ணம்
பலமாக வைத்துநான் பாட - உலகிற்கு
இதுவெண்பாட் டில்லையெனில் கல்லாத நானும்
எதுவெண்பாட் டென்றறிவ து.

கங்குபோல் சூடான கிள்ளியின் பாட்டில்
அங்கிங்கு கொஞ்கம் தளைதட்ட மாற்றியே
தங்கத் தமிழின் இனிமை மறந்து
பங்கம் விளைவிக்கும் பாவிகளே – உங்கள்
பிறப்புயர்ந்த தேதமி ழாலென் றறிவீர்
இறக்கும்போ தேனு மினியென்று கொண்டேன்
குறையு மிருந்தாலேக் கூறு.

பழுதில்லை உண்மைப் பகருங்கால் நானிங்
கெழுதியவை யெல்லாம்வெண் பா.

விந்தை உலகில் வியக்காத நாளில்லை
அந்தமில்லாச் செந்தமிழி னங்கதனை - எந்தையாங்
கந்தன் அருளால் கவிபாடச் சந்தவ
சந்தத்தில் கற்றேன் சிறிது.

வெங்காயம் சொல்லது வெந்தணலா யுள்ளது
இங்காரைச் சொன்னாரோ யானறியேன் - மங்காத
செந்தமிழில் சொன்னார் சினம்தெறிக்க அன்னார்தான்
என்பிழையோ என்றே இயம்பு.

ஈரா றடிமேல் இனியவெண் டளையொடு
சீரான ஓசையும் செப்பலாய் - நேராக
வந்தப்பாட் டேகலி வெண்பா எனப்படும்
இந்தப்பா வெற்றுக்க லி.

வெள்ளைக் குரியது வெண்டளை மட்டுமே
உள்ளதைச் சொல்லி விளக்கவா - வெள்ளைக்
கலிக்குண்டு துள்ளும் கலித்தளை என்ப
கலிவெண்பாட் டிற்குக் கலித்தளை ஆகா
கலிவெண்பா வெள்ளைக் குடும்பத் தொடுக்கம்
கலிப்பா வகைவெண் கலி.

எழில்கொஞ்சு மீழத் தெரிவெங்கா யந்தாம்
பழிக்கவே தோயெந்தம் பாவம் - விழிக்கிறே
னென்றுமே மந்தன்னா னென்னுடைய சிற்றறிவிற்
கொன்றும் விளங்கவில் லை.

எண்ணங்கள் வண்ணங்கள்

மண்தின்ற பாணமென்ற மேலான தோர்கவி
மண்தின்ற போதும் மறைந்திலன் - மண்பார்க்க
வெண்பா வலையேற வைத்ததற்கு நன்றிகூறி
வெண்பா வடிக்கலாம் வா.

கண்ணிமைக்கும் நேரத்தில் கார்மேகம் போலிங்கு
எண்ணற்ற பாமழை யாம்பொழிவோம் - நண்பாகேள்
பண்பாய் அழைத்தாரோர் பேரறிவு சீவிநாம்
வெண்பா வடிக்கலாம் வா.

கொத்தனார் என்றொருவர் கேட்டார் ஒருகேள்வி
சத்தேனும் சிந்திக்கச் செய்தார்ஒன் றைத்தெளி
வித்தார் தெரியாது வெண்பா இலக்கணம்
எத்தால் எழுதுவோம் என்று.

வெண்பாவெண் பாவென்றீர் வேண்டியது நீர்கேளீர்
உண்மை உரைப்பேன் விரைவாக – கண்ணா
பளிங்குபோல் நல்லவெண் பாவிலக்க ணந்தான்
விளக்கினேன் முப்பா வரைந்து.

மூணேசீர் ஈற்றடி மற்றவைநாற் சீரடி
வெண்டளையும் செப்பலோசை வெண்பாக்காம் - இன்னும்
கடைசிச்சீர் நாள்மலர் காசுப் பிறப்புக்
கடுக்காத மோனயெது கை.

நேரிசை இன்னிசை நேர்த்தி இரண்டுண்டு
நேராகச் சொல்லிவிடும்; நேரமிது - ஓர்தனிச்சொல்
இட்டால் அதுநேராம் எங்குமச் சொல்வரா
விட்டால் இனிதாம் உணர்.

சீராக மூவடி சிந்திய லெனும்பாவுக்
கோரடிக் கெட்டாற் குறளென்ப - நேர்பனி
ரெண்டு வரையாம் எதுகயும மோனயும
கொண்டுவரப் பேரழகுக் காண்

வெண்பா யிருகாலிற் கல்லானை யெற்றென்று
வெண்பாவில் அன்றே உரைத்தாளோர் பெண்பாவை
எண்ணமெது வோமணி வண்ணன்நான் சொல்கின்றேன்
எண்ணம்போல் வெண்பா எழுது.

வண்ணம் புலியெனலாம் வெண்பா புலியல்ல
எண்ணம் இருந்தால் எழுதலாம் - மண்போற்ற
பண்போடு வாழும் படிசெய் ததமிழால்
வெண்பாவை வென்றிடுவோம் வா.

வெண்பா விளையாட வித்திட்ட எண்ணங்கள்
வண்ணங்கள் சீவிக்கு நன்றிகள் – நண்பர்கள்
வெல்லம் கலந்தன்ன வெண்பாஅக் கள்படைக்க
மெல்லத் தமிழ்வாழும் மன்

வெண்பா விளையாடும் வாய்ப்பை யெனக்களித்த
நண்பராம் சாய்க்குநன் றி.

தேங்கவிதைச் சீரான தோர்கவிதை பார்பரவும்
பூங்குழலி பாட்டின் புகழ்.

தீங்கில்லாப் பாடல் தந்திட்டப் பூங்குழலி
ஓங்கட்டும் உந்தன் புகழ்.

சீர்மிகுச் செய்யுளாய்ச சீர்செய்த சுரேசுக்குப்
பாரெத்த னையார்வம் தான்.

அமரக் கவியும்நம் அன்பர் படைப்பர்க்
குமரன் கவிதனைக் காண்.

பகரும் புகழடையும் பின்னாளில் பார்க்கச்
செகன்மோகன் பாடல் சிறப்பு.

தளைதட்டத் தீங்கில்லை தானேச்சீ ராகும்
விளையட்டும் வெண்பா விதை.

வெண்பாவி லார்வம் விளைகின்ற வேகங்கண்
டுண்ணாமல் வாழ்வே னினி.

வெள்ளை யரைவிரட்டி வெற்றிக் கொடிநாட்டி
கொள்ளையர் கையில் கொடுத்தோமே (கொடுத்திட்டோம்) - கொள்ளையர்
கொள்ளை அடிக்கா திராரென் றிருந்தக்காற்
கொள்ளை அழகாகும் காண்

தேடாத நாளில்ல தேங்கும் பசிவயிற்றில்
பீடுநடை போடுது பிஸ்ஸா பிறவுணவும்
வாடாமல் நானில்லை காயுது தினம்வயிறு
சூடான நெய்யப்பம் தாவென்றால் இன்னிசையாம்
பாடல் தவறில்லை பார்

எலக்கணமுந் தந்தாச்சி ஈத்தடியுஞ் சொன்னாச்சி
கலக்கணுமே ஒண்ணுமே காணோம் - அலுத்தாச்சா
வெம்பாவும் என்னாச்சி வேகம் கொறஞ்சாச்சி
சும்மாவே நின்னுபோச் சே.

மண்ணில் அறுத்தது நக்கிக் குடிப்பதுகண்
கொண்ட துயிர்ப்பது தன்தலையாக் - கொண்டது
தலைக்கொள்ள பூவுமாம் தன்பின்னா லேமா
வலைக்குள்ளே சிக்கிய மான்.

இராமதிபோல் மின்னும் இனியவெண்பா சொன்ன
இராமகிக் கென்வந்த னம்.

மயில்தனக் கொப்போ வான்கோழி அம்மானை?
மன்னவனுக் கொப்போ மண்ணாந்தை அம்மானை?
குயில்தனக் கொப்போ கருங்காக்கை அம்மானை?
குன்றத்துக் கொப்போ குப்பைமே டம்மானை?
அயில்தனக் கொப்போ இழையூசி அம்மானை?
அன்னத்தின் முன்னாலே பன்றியோ அம்மானை?
ஒயிலாகச் செப்பியதும் என்பாவோ அம்மானை?
ஒன்றாமோ இராமகிக்கு இராமதியன் அம்மானை?

உருப்பால் உலகம் உழல்வதைத் தடுக்க
செருக்குடன் சக்தியைதன் சேவைக்கு அழைத்தான்
நெருப்பிலே பூத்த மலர்.

வளவுதரும் பேரெழில் வங்கவி பாடு
மளவான வெள்ளை யழகாந் - தெளிந்த
மதிகொள் ளுமிரா மகியென் றிருந்தா
லிதிலென்ன விந்தை யியம்பு.

சந்தவசந்தம்

மன்னுந் தமிழால் மணிவண்ணன் நானுமின்
றன்புட னிட்டேனோ ராணைதான் - மின்வெண்பா
தந்துநான் கேட்கின்றேன் தப்பாம லென்னைநீ
சந்தவ சந்தத்தில் சேர்.

மண்ணுமவ் விண்ணு மதியு மொருநதியும்
பெண்ணாகக் கொள்ளுந் பெருநாட்டிற் - பெண்டிற்குத்
தொல்லையு மாபத்துந் தீமையு முள்ளவரைப்
புல்லையுந் தின்னும் புலி.

நெல்லைக் கடவுளெனும் நந்நாட்டில் பட்டினியால்
மெல்லவேச் சாகின்ற மக்களைக் காணும்போ
தில்லையே சான்றோர்காள் இவ்வுலகில் என்றெண்ணிப்
புல்லையுந் தின்னும் புலி.

பள்ளிப் பருவத்தில் பாடம் பயிலாது
பிள்ளைகள் தங்கள் பசிபோக்க - அள்ளியிரு
கல்லைத் தலைகொள்ளுங் காட்சியைத் தாங்காதுப்
புல்லையுந் தின்னும் புலி.

இந்திரனும் சந்திரனும் இன்னபிற மந்திரனும்
சிந்தை கலங்குமாறு செய்தனரே - செந்தமிழர்
எல்லையே யின்றி யிருக்குந் திறம்பார்த்துப்
புல்லையுந் தின்னும் புலி.

சிரிக்குமிரு கண்சிமிட்டும் சின்னநடை போடும்
கரும்புக் குரலால் கதைக்கும் - ஒருமழலைச்
சொல்லை நிதங்கேட்டால் சொர்க்க மதுவென்று
புல்லையுந் தின்னும் புலி.

நீரசம் முதலா நூற்றுப் பதினெட்டாந்
தோராய மாகத் தனிமங்கள் - ஆராய்ந்
தவற்றின் பெயரை அழகுத் தமிழ்கொண்டு
உவந்து கூறாய் விரைந்து.

அலட்சியமாய் நைதரசன் ஐதரசன் நாகம்
கலசியம் ஓட்சிசன் காபன் - வலையில்
அகிலம் முழுதும் பரவிக் கிடக்கும்
விகிபீ டியாசொல் வது.

மெல்லத் தமிழினி மேற்சாகப் போகுதா
மெல்ல ருமுட்க வெழுதினான் வல்லவன்
மெல்லக் கதறினேன் மூழ்கினேன் சோகத்தில்
மெல்ல முடியா மலே.

அந்தமு மாதியு மான பரம்பொருள்
கந்தன் பெயராலே கேட்கிறேன் - செந்தமிழில்
இந்தத் தனிமத்திற் கிந்தப் பெயரென்று
சந்த வசந்தமே செப்பு.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறளைக் கொடுத்தத்
தமிழிலே யில்லாத தா?

பாரதி யென்ற பெருங்கவிப் பாடினான்
பாரதி ரும்நற் புதுக்கவிதை – பாரதிலும்
பாரதி யருளோடு பாவடித்த எங்களின்
பாரதிக் கீடில்லைப் பார்.

தத்தமக்குப் பேர்புகழைத் தேடிடவே மற்றோர்மேற்
கத்தமதைப் பூசிக் களித்திடுவ - ருத்தமரைச்
சீண்டி மகிழுஞ் சிதம்பவெல் லாரம்போற்
சீண்டிரம் பேசுஞ் சிலர்.

தலைக்குறை கமலத்தைத் தேடுமீக் கட்கு
வலைக்கள மானதுநாம் வெட்க - வலையைக்
கலைவளம் மிக்க கருவியாச் செய்வோம்
தலைக்கனங்கொண் டோரைத் தவிர்த்து.

எழு,தா கவிதை!என, சொன்னேன் இதுநாள்
எழுதாக் கவி,தை னியங்கண்டு நீயும்
எழு,தாக் க,விதைநல் லெண்ணம் இதுவே
எழுதாக் கவிதை என.

வெட்டு குறளை வரிமூன் றிலெழுது
தட்டுங் கவிதைஅய்க் கூ.

அய்க்கூ:
வெட்டு குறளை
வரி மூன்றில் எழுது
தட்டும் கவிதை.

என்பா - வெண்பா?

கான மயிலாடக் கண்டிருந்த வாங்கோழித்
தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தம்
பொல்லாச் சிறகவிரித் தாடினாற் போலும்மே
கல்லாதாங் கற்ற கவி. - ஒளவையார்.

கல்லாத போதுங் கவிபாட யத்தனித்தேம்
பொல்லாத வாங்கோழி போலவே - எல்லாப்
பிழையும் பொறுத்துப் புலமை யளித்து
விழைவானீ என்னா விலே.

அகர முதலா யனைத்திற்கு மிங்குச்
சிகர மெனவிளங்குஞ் சேடீ - பகரும்
புகழுடைய நின்மலர்ப் பாதம் பணிந்தேன்
திகழ்வாயென் னாவிலே தான்.

அன்பாய் உரைத்தாலும் ஆரே ழுநிமிடத்தில்
முன்வாசல் டீக்கடயில் மூடிடுவர் - நண்பா
சிநேகமாய் கூப்பிட்டால் சீக்கிரமாய் நீயெழுந்து
வேகமாய் டீகுடிக்க வா.

வருநாளில் நாம்சேர்ந்து வாழ்தல் நிகழாது
இருநாளில் டீகுடிப்போம் ஈங்கு - அருணேகேள்
பணம்கொடுத்தும் கிட்டாது பின்னாளில் வாய்ப்பு
கணப்பொழுதில் நீதான் கிளம்பு.

பத்தாண்டு பாராள பத்துதிங்கள் பிள்ளைபெற
பத்துநாள் போதும் பரியேற - மெத்தையில்
பத்துமணி தூங்க புறப்பட்டு டீக்குவா
பத்துநிமி டத்தில் பறந்து.

எப்போதும் போலவே எல்லாம் இருக்காது
முப்போது காணல் முடியாது - அப்பாநீ
தப்பாது வாராய் தமிழ்கூறி கூப்பிட்டேன்
இப்போது டீகுடிக்க இங்கு.

கண்ணும் பிறகாணக் கூசுதே னெஞ்சந்தா
னெண்ணும் பொழுதி லெரியுதே - மண்ணிலே
யின்னு முயிர்வாழ்தற் கிசையாதே யையோயெ
னன்பிற் குரியோளைக் கண்டு.

நாளை ஒருநாள்தான் நாம்சேர்ந்து நிற்கும்நாள்
வேளைவந்த திங்கே வெளியேற - நாளை
எங்கேயோ யாரோடோ எப்படியோ யாரரிவார்
இங்கேடீ குடிக்க இறங்கு.

இன்றல்லோ ப்ராசக்ட்; இறுதினாள் இன்றல்லோ
என்கோடு பீத்ரீயில் ஏறானாள் - இன்றல்லோ
எஞ்சியகோட் மீதிவைத்து ஏனயகோட் மூடிவைத்து
பெஞ்சினிலே போய்சேரும் நாள்.

உய்ய வழியின்றி வூர்விட்டு வந்தேன்னா
னய்யாவென் றன்குறைதா னாரரிவார் - மெய்யுருக்கு
வெய்யிலி லென்னுடல் வேகிறதே யையையோ
செய்வதென்ன டேம்பாவிற் செப்பு.

சிறப்பு பலப்பெற்றுச் சீராக வாழ
பிறந்ததே யிங்கொரு பிள்ளை - மறவா
தழகுத் தமிழ்கூறி ஆசிபல கூறி
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

சிமிழ்கண்ணின் பேச்சும் சிறுவாயின் பேச்சு
மமிழ்தோ மொழிக்கோ ரணியோ - தமிழில்
மழலை மொழிபேச மான்போல வாராய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

பாலும் பழமும் பருப்பும் கிழங்குமாம்
மேலு மரிசியு மெல்லவாம் - நாளும்
விழுங்கி வளர்வாயே வீடிகைதான் மெல்வாய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

அரைதனில் பட்டுடுத்தி ஆக்ஞைசெய்யும் நீதான்
மரையோ பிறையோவோர் மானோ - தரையில்
பழகு நடைப்போட்டு பார்மகிழச் செய்வாய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

பற்பல வித்தைகளும் பாராளு முத்திகளும்
கற்றுப் பலச்செல்வம் காணவேப் - பெற்றுச்
செழித்துநல் பேர்புகழுஞ் சேர்த்திங்கு வாழ்வாய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

ஓடி வுழைப்பாய் ஒருவுலகம் வெல்வானீ
நாடி நலம்புரிவாய் நல்மனையுங் - கூடித்
தழைத்தோங்கித் தந்தையும் தாய்சேயும் வாழ
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

சீர்மிகு அமெரிக்கச் சீமையிலே பெண்டிர்காள்
பேர்புகழும் தைரியமும் பெற்றோராம் - பாரில்
கடுமுயற்சி செய்யுமாம் கண்ணியமும் உண்டாம்
படுசுட்டிப் பெண்ணெலிச பெத்.

வெள்ளிக் கிழமைதான் வேளை மதியம்தான்
அள்ளி உணவுண்ண ஆசைதான் - எள்ளி
நகையாடும் வண்ணம்தான் நான்பெருத்துப் போனேன்
வகையாய்த் தடுக்கும் வயிறு.

இடியோடு மின்னல் இருளாக வானம்
வெடிபோலச் சத்தமும் வேறு – அடிவயிறு
மெல்லக் கலங்குது மேலாய் விரைந்துநாம்
செல்வோமா வீட்டிற்குச் சேர்ந்து.


தித்திக்கும் தேனாக திக்கெட்டும் பேசட்டும்
பெத்தென்னும் பெண்ணின் புகழ்.

அடுக்கான ஆங்கிலம் ஆழமாக்க ருத்து
கடுக்காத பெத்தின் கதை.

வெண்பா எழுத வெறுப்பென்ன தானுனக்கு
பண்பா எழுதப் பயன்தானே - நண்பாகேள்
உன்பால் பிரியமுண்டு உண்மையில் நீகூறு
என்பாவில் குற்றமென்ன என்று.

கண்போன்ற செந்தமிழை கேட்டுக் களித்திந்த
மண்போற்றும் காலம் மலரட்டும் - வெண்பாவை
மெய்யாகப் போற்றுமோர் மேலான நாள்வரும்
அய்யாநீ கொஞ்சம் அறி.

இலக்கணம் போதுமா இன்னோசை கூட
வலுவாய்க் கருத்தெல்லாம் வேண்டாமா வெற்றுப்
புலம்பலும்வெண் பாவா பகர்.

நாட்டுச் சரக்கூஉ நச்சுனு தானிருக்கு
கிட்டவந்து முட்டவந்தா கிண்ணுனு தானிருக்கு
பாட்டில் இலக்கணம் பாங்காகத் தானிருக்கு
பாட்டிது வெண்பாவா பார்.

விகிபீ டியாபார்த்து வெண்பா எழுத
தகுமா இதுசரி தானா – வெகுவா
தொல்காப் பியஞ்சொன்ன தெல்லாமே தண்டமா
இல்லையா கொஞ்சம் இயம்பு.

பிறப்பில் வளர்ப்பில் பொசுக்கும் வெய்யில்
வறுப்பில் குளிரின் விறைப்பில் தெறுவில்ஏன்
நொவ்வில் இறப்பிலும் நான்கருப்பு நீயோ
இவ்வுலகில் உள்ளநிறம் எல்லாமும் பெற்றாய்
பிறக்கையில் பூஞ்சை பிறகு வளர
உறுவதோ வெள்ளைத்தோல் வெய்யில் வறுக்க
குருதிபோல் செம்மை குளிரிலோ நீலம்
மருளவும் நொவ்விலும் மஞ்சள் பசலை
அழிவில் வெளிறினாய் இன்றென்னைக் காட்டிக்
கெழிறென்றாய் என்னே கொழுப்பு.

இருள்நீக்கும் எல்லனே எல்லோர்க்கும் நல்லாய்
மருளாதோர் ஆணை மொழிந்தேன் - அருள்மழையை
நெல்புல் தழைக்கச்செய் நீரின் தன்மைபோல்
புல்புல் தழைக்கப் பொழி.

பதின்மூன்று வெள்ளியின்பாற் பட்டுவரும் நாட்கள்
அதுவாண்டில் எத்தனை ஈண்டருகும் என்ன
பதின்மூன்று ரோமத்தில் பாங்காய் எழுத
பதிலாக நிற்கும் பிரிந்து.

பொன்னம்மா கேட்ட புதிரிலே உள்ளவர்
அன்னம் இனியாவும் ஆதிரையும் - அன்னையின்
அன்புடைய பெண்கள் அவர்கள் வயதோ
ஒன்பஃது இரண்டோடு இரண்டு.

அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
அருக்கணுமே மூன்றாய் அவற்றை - வருகும்
முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.

அனைத்திற்கும் மேலான ஆசானைக் காணத்
தனியாக வந்தவரும் தானில் - எனக்கூறின்
விண்ணவன் ஈசன் வழிவந்த மக்களின்
கண்களை நீஎண்ணிக் கொள்.

அல்பகாப் பற்றி அழகாய் விளக்கமும்
நல்ல படங்கள் நாலைந்தும்! சொல்லும்
திறன்மிக நன்று.உன் திறமை வளர்ந்து
சிறக்கட்டும் நன்மை சேர்ந்து.

ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்
காயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை
தீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம்
தாங்காமல் கண்ணீர் தரும்.

செல்லத் தமிழினி சாகாது இனிமேலே
எல்லாம் தமிழென்றே ஆகுமே – நல்லோனே
வெல்லத் தமிழ்பாட வந்தோமே நாமெல்லாம்
மெல்லத் தமிழ்வாழும் மன்

யாவும் அறிமொழியாம் இன்தமிழ் கொண்டொருவெண்
பாவில் விடுகதையும் பாடினை - ஆவும்
குதிரயும் கேளேன் கவிபாடி நின்றேன்
பதிலெனத் தாராய் பரிசு

காதலால் வாய்த்த கவிகள் பலவுண்டு
காதலால் மாய்ந்த கவிகளும் இங்குண்டு
காதலால் என்ற கருத்துண்டிங் கென்தனக்
காதலால் சென்றேன் கழன்று.

பொல்லாத் தமிழின் பெருமை எதுவெனில்
எல்லாக் கவிதையும் யாப்பில் அடங்கும்
கல்லாதான் கற்ற கவிபற்றிச் சொன்னவள்
சொல்லாதது ஒன்றுண்டோ சொல்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org