.comment-link {margin-left:.6em;}

எண்ணங்கள் வண்ணங்கள்

மண்தின்ற பாணமென்ற மேலான தோர்கவி
மண்தின்ற போதும் மறைந்திலன் - மண்பார்க்க
வெண்பா வலையேற வைத்ததற்கு நன்றிகூறி
வெண்பா வடிக்கலாம் வா.

கண்ணிமைக்கும் நேரத்தில் கார்மேகம் போலிங்கு
எண்ணற்ற பாமழை யாம்பொழிவோம் - நண்பாகேள்
பண்பாய் அழைத்தாரோர் பேரறிவு சீவிநாம்
வெண்பா வடிக்கலாம் வா.

கொத்தனார் என்றொருவர் கேட்டார் ஒருகேள்வி
சத்தேனும் சிந்திக்கச் செய்தார்ஒன் றைத்தெளி
வித்தார் தெரியாது வெண்பா இலக்கணம்
எத்தால் எழுதுவோம் என்று.

வெண்பாவெண் பாவென்றீர் வேண்டியது நீர்கேளீர்
உண்மை உரைப்பேன் விரைவாக – கண்ணா
பளிங்குபோல் நல்லவெண் பாவிலக்க ணந்தான்
விளக்கினேன் முப்பா வரைந்து.

மூணேசீர் ஈற்றடி மற்றவைநாற் சீரடி
வெண்டளையும் செப்பலோசை வெண்பாக்காம் - இன்னும்
கடைசிச்சீர் நாள்மலர் காசுப் பிறப்புக்
கடுக்காத மோனயெது கை.

நேரிசை இன்னிசை நேர்த்தி இரண்டுண்டு
நேராகச் சொல்லிவிடும்; நேரமிது - ஓர்தனிச்சொல்
இட்டால் அதுநேராம் எங்குமச் சொல்வரா
விட்டால் இனிதாம் உணர்.

சீராக மூவடி சிந்திய லெனும்பாவுக்
கோரடிக் கெட்டாற் குறளென்ப - நேர்பனி
ரெண்டு வரையாம் எதுகயும மோனயும
கொண்டுவரப் பேரழகுக் காண்

வெண்பா யிருகாலிற் கல்லானை யெற்றென்று
வெண்பாவில் அன்றே உரைத்தாளோர் பெண்பாவை
எண்ணமெது வோமணி வண்ணன்நான் சொல்கின்றேன்
எண்ணம்போல் வெண்பா எழுது.

வண்ணம் புலியெனலாம் வெண்பா புலியல்ல
எண்ணம் இருந்தால் எழுதலாம் - மண்போற்ற
பண்போடு வாழும் படிசெய் ததமிழால்
வெண்பாவை வென்றிடுவோம் வா.

வெண்பா விளையாட வித்திட்ட எண்ணங்கள்
வண்ணங்கள் சீவிக்கு நன்றிகள் – நண்பர்கள்
வெல்லம் கலந்தன்ன வெண்பாஅக் கள்படைக்க
மெல்லத் தமிழ்வாழும் மன்

வெண்பா விளையாடும் வாய்ப்பை யெனக்களித்த
நண்பராம் சாய்க்குநன் றி.

தேங்கவிதைச் சீரான தோர்கவிதை பார்பரவும்
பூங்குழலி பாட்டின் புகழ்.

தீங்கில்லாப் பாடல் தந்திட்டப் பூங்குழலி
ஓங்கட்டும் உந்தன் புகழ்.

சீர்மிகுச் செய்யுளாய்ச சீர்செய்த சுரேசுக்குப்
பாரெத்த னையார்வம் தான்.

அமரக் கவியும்நம் அன்பர் படைப்பர்க்
குமரன் கவிதனைக் காண்.

பகரும் புகழடையும் பின்னாளில் பார்க்கச்
செகன்மோகன் பாடல் சிறப்பு.

தளைதட்டத் தீங்கில்லை தானேச்சீ ராகும்
விளையட்டும் வெண்பா விதை.

வெண்பாவி லார்வம் விளைகின்ற வேகங்கண்
டுண்ணாமல் வாழ்வே னினி.

வெள்ளை யரைவிரட்டி வெற்றிக் கொடிநாட்டி
கொள்ளையர் கையில் கொடுத்தோமே (கொடுத்திட்டோம்) - கொள்ளையர்
கொள்ளை அடிக்கா திராரென் றிருந்தக்காற்
கொள்ளை அழகாகும் காண்

தேடாத நாளில்ல தேங்கும் பசிவயிற்றில்
பீடுநடை போடுது பிஸ்ஸா பிறவுணவும்
வாடாமல் நானில்லை காயுது தினம்வயிறு
சூடான நெய்யப்பம் தாவென்றால் இன்னிசையாம்
பாடல் தவறில்லை பார்

எலக்கணமுந் தந்தாச்சி ஈத்தடியுஞ் சொன்னாச்சி
கலக்கணுமே ஒண்ணுமே காணோம் - அலுத்தாச்சா
வெம்பாவும் என்னாச்சி வேகம் கொறஞ்சாச்சி
சும்மாவே நின்னுபோச் சே.

மண்ணில் அறுத்தது நக்கிக் குடிப்பதுகண்
கொண்ட துயிர்ப்பது தன்தலையாக் - கொண்டது
தலைக்கொள்ள பூவுமாம் தன்பின்னா லேமா
வலைக்குள்ளே சிக்கிய மான்.

இராமதிபோல் மின்னும் இனியவெண்பா சொன்ன
இராமகிக் கென்வந்த னம்.

மயில்தனக் கொப்போ வான்கோழி அம்மானை?
மன்னவனுக் கொப்போ மண்ணாந்தை அம்மானை?
குயில்தனக் கொப்போ கருங்காக்கை அம்மானை?
குன்றத்துக் கொப்போ குப்பைமே டம்மானை?
அயில்தனக் கொப்போ இழையூசி அம்மானை?
அன்னத்தின் முன்னாலே பன்றியோ அம்மானை?
ஒயிலாகச் செப்பியதும் என்பாவோ அம்மானை?
ஒன்றாமோ இராமகிக்கு இராமதியன் அம்மானை?

உருப்பால் உலகம் உழல்வதைத் தடுக்க
செருக்குடன் சக்தியைதன் சேவைக்கு அழைத்தான்
நெருப்பிலே பூத்த மலர்.

வளவுதரும் பேரெழில் வங்கவி பாடு
மளவான வெள்ளை யழகாந் - தெளிந்த
மதிகொள் ளுமிரா மகியென் றிருந்தா
லிதிலென்ன விந்தை யியம்பு.

Comments:
அண்ணா, மணிவண்ணா, உங்க கால கொஞ்சம்.... இப்படி போட்டுத்தாக்கறீரு காட்டாத்து வெள்ளம்போல் இது ஒரு வெண்பா வெள்ளம்....

தமிழ்மணத்திற்கு நல்வரவு!
 

Post a Comment



<< முகப்பு

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org