.comment-link {margin-left:.6em;}

சந்தவசந்தம்

மன்னுந் தமிழால் மணிவண்ணன் நானுமின்
றன்புட னிட்டேனோ ராணைதான் - மின்வெண்பா
தந்துநான் கேட்கின்றேன் தப்பாம லென்னைநீ
சந்தவ சந்தத்தில் சேர்.

மண்ணுமவ் விண்ணு மதியு மொருநதியும்
பெண்ணாகக் கொள்ளுந் பெருநாட்டிற் - பெண்டிற்குத்
தொல்லையு மாபத்துந் தீமையு முள்ளவரைப்
புல்லையுந் தின்னும் புலி.

நெல்லைக் கடவுளெனும் நந்நாட்டில் பட்டினியால்
மெல்லவேச் சாகின்ற மக்களைக் காணும்போ
தில்லையே சான்றோர்காள் இவ்வுலகில் என்றெண்ணிப்
புல்லையுந் தின்னும் புலி.

பள்ளிப் பருவத்தில் பாடம் பயிலாது
பிள்ளைகள் தங்கள் பசிபோக்க - அள்ளியிரு
கல்லைத் தலைகொள்ளுங் காட்சியைத் தாங்காதுப்
புல்லையுந் தின்னும் புலி.

இந்திரனும் சந்திரனும் இன்னபிற மந்திரனும்
சிந்தை கலங்குமாறு செய்தனரே - செந்தமிழர்
எல்லையே யின்றி யிருக்குந் திறம்பார்த்துப்
புல்லையுந் தின்னும் புலி.

சிரிக்குமிரு கண்சிமிட்டும் சின்னநடை போடும்
கரும்புக் குரலால் கதைக்கும் - ஒருமழலைச்
சொல்லை நிதங்கேட்டால் சொர்க்க மதுவென்று
புல்லையுந் தின்னும் புலி.

நீரசம் முதலா நூற்றுப் பதினெட்டாந்
தோராய மாகத் தனிமங்கள் - ஆராய்ந்
தவற்றின் பெயரை அழகுத் தமிழ்கொண்டு
உவந்து கூறாய் விரைந்து.

அலட்சியமாய் நைதரசன் ஐதரசன் நாகம்
கலசியம் ஓட்சிசன் காபன் - வலையில்
அகிலம் முழுதும் பரவிக் கிடக்கும்
விகிபீ டியாசொல் வது.

மெல்லத் தமிழினி மேற்சாகப் போகுதா
மெல்ல ருமுட்க வெழுதினான் வல்லவன்
மெல்லக் கதறினேன் மூழ்கினேன் சோகத்தில்
மெல்ல முடியா மலே.

அந்தமு மாதியு மான பரம்பொருள்
கந்தன் பெயராலே கேட்கிறேன் - செந்தமிழில்
இந்தத் தனிமத்திற் கிந்தப் பெயரென்று
சந்த வசந்தமே செப்பு.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறளைக் கொடுத்தத்
தமிழிலே யில்லாத தா?

பாரதி யென்ற பெருங்கவிப் பாடினான்
பாரதி ரும்நற் புதுக்கவிதை – பாரதிலும்
பாரதி யருளோடு பாவடித்த எங்களின்
பாரதிக் கீடில்லைப் பார்.

தத்தமக்குப் பேர்புகழைத் தேடிடவே மற்றோர்மேற்
கத்தமதைப் பூசிக் களித்திடுவ - ருத்தமரைச்
சீண்டி மகிழுஞ் சிதம்பவெல் லாரம்போற்
சீண்டிரம் பேசுஞ் சிலர்.

தலைக்குறை கமலத்தைத் தேடுமீக் கட்கு
வலைக்கள மானதுநாம் வெட்க - வலையைக்
கலைவளம் மிக்க கருவியாச் செய்வோம்
தலைக்கனங்கொண் டோரைத் தவிர்த்து.

எழு,தா கவிதை!என, சொன்னேன் இதுநாள்
எழுதாக் கவி,தை னியங்கண்டு நீயும்
எழு,தாக் க,விதைநல் லெண்ணம் இதுவே
எழுதாக் கவிதை என.

வெட்டு குறளை வரிமூன் றிலெழுது
தட்டுங் கவிதைஅய்க் கூ.

அய்க்கூ:
வெட்டு குறளை
வரி மூன்றில் எழுது
தட்டும் கவிதை.

Comments: Post a Comment



<< முகப்பு

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org