.comment-link {margin-left:.6em;}

என்பா - வெண்பா?

கான மயிலாடக் கண்டிருந்த வாங்கோழித்
தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தம்
பொல்லாச் சிறகவிரித் தாடினாற் போலும்மே
கல்லாதாங் கற்ற கவி. - ஒளவையார்.

கல்லாத போதுங் கவிபாட யத்தனித்தேம்
பொல்லாத வாங்கோழி போலவே - எல்லாப்
பிழையும் பொறுத்துப் புலமை யளித்து
விழைவானீ என்னா விலே.

அகர முதலா யனைத்திற்கு மிங்குச்
சிகர மெனவிளங்குஞ் சேடீ - பகரும்
புகழுடைய நின்மலர்ப் பாதம் பணிந்தேன்
திகழ்வாயென் னாவிலே தான்.

அன்பாய் உரைத்தாலும் ஆரே ழுநிமிடத்தில்
முன்வாசல் டீக்கடயில் மூடிடுவர் - நண்பா
சிநேகமாய் கூப்பிட்டால் சீக்கிரமாய் நீயெழுந்து
வேகமாய் டீகுடிக்க வா.

வருநாளில் நாம்சேர்ந்து வாழ்தல் நிகழாது
இருநாளில் டீகுடிப்போம் ஈங்கு - அருணேகேள்
பணம்கொடுத்தும் கிட்டாது பின்னாளில் வாய்ப்பு
கணப்பொழுதில் நீதான் கிளம்பு.

பத்தாண்டு பாராள பத்துதிங்கள் பிள்ளைபெற
பத்துநாள் போதும் பரியேற - மெத்தையில்
பத்துமணி தூங்க புறப்பட்டு டீக்குவா
பத்துநிமி டத்தில் பறந்து.

எப்போதும் போலவே எல்லாம் இருக்காது
முப்போது காணல் முடியாது - அப்பாநீ
தப்பாது வாராய் தமிழ்கூறி கூப்பிட்டேன்
இப்போது டீகுடிக்க இங்கு.

கண்ணும் பிறகாணக் கூசுதே னெஞ்சந்தா
னெண்ணும் பொழுதி லெரியுதே - மண்ணிலே
யின்னு முயிர்வாழ்தற் கிசையாதே யையோயெ
னன்பிற் குரியோளைக் கண்டு.

நாளை ஒருநாள்தான் நாம்சேர்ந்து நிற்கும்நாள்
வேளைவந்த திங்கே வெளியேற - நாளை
எங்கேயோ யாரோடோ எப்படியோ யாரரிவார்
இங்கேடீ குடிக்க இறங்கு.

இன்றல்லோ ப்ராசக்ட்; இறுதினாள் இன்றல்லோ
என்கோடு பீத்ரீயில் ஏறானாள் - இன்றல்லோ
எஞ்சியகோட் மீதிவைத்து ஏனயகோட் மூடிவைத்து
பெஞ்சினிலே போய்சேரும் நாள்.

உய்ய வழியின்றி வூர்விட்டு வந்தேன்னா
னய்யாவென் றன்குறைதா னாரரிவார் - மெய்யுருக்கு
வெய்யிலி லென்னுடல் வேகிறதே யையையோ
செய்வதென்ன டேம்பாவிற் செப்பு.

சிறப்பு பலப்பெற்றுச் சீராக வாழ
பிறந்ததே யிங்கொரு பிள்ளை - மறவா
தழகுத் தமிழ்கூறி ஆசிபல கூறி
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

சிமிழ்கண்ணின் பேச்சும் சிறுவாயின் பேச்சு
மமிழ்தோ மொழிக்கோ ரணியோ - தமிழில்
மழலை மொழிபேச மான்போல வாராய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

பாலும் பழமும் பருப்பும் கிழங்குமாம்
மேலு மரிசியு மெல்லவாம் - நாளும்
விழுங்கி வளர்வாயே வீடிகைதான் மெல்வாய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

அரைதனில் பட்டுடுத்தி ஆக்ஞைசெய்யும் நீதான்
மரையோ பிறையோவோர் மானோ - தரையில்
பழகு நடைப்போட்டு பார்மகிழச் செய்வாய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

பற்பல வித்தைகளும் பாராளு முத்திகளும்
கற்றுப் பலச்செல்வம் காணவேப் - பெற்றுச்
செழித்துநல் பேர்புகழுஞ் சேர்த்திங்கு வாழ்வாய்
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

ஓடி வுழைப்பாய் ஒருவுலகம் வெல்வானீ
நாடி நலம்புரிவாய் நல்மனையுங் - கூடித்
தழைத்தோங்கித் தந்தையும் தாய்சேயும் வாழ
வழங்கினேன் னெஞ்சார வாழ்த்து.

சீர்மிகு அமெரிக்கச் சீமையிலே பெண்டிர்காள்
பேர்புகழும் தைரியமும் பெற்றோராம் - பாரில்
கடுமுயற்சி செய்யுமாம் கண்ணியமும் உண்டாம்
படுசுட்டிப் பெண்ணெலிச பெத்.

வெள்ளிக் கிழமைதான் வேளை மதியம்தான்
அள்ளி உணவுண்ண ஆசைதான் - எள்ளி
நகையாடும் வண்ணம்தான் நான்பெருத்துப் போனேன்
வகையாய்த் தடுக்கும் வயிறு.

இடியோடு மின்னல் இருளாக வானம்
வெடிபோலச் சத்தமும் வேறு – அடிவயிறு
மெல்லக் கலங்குது மேலாய் விரைந்துநாம்
செல்வோமா வீட்டிற்குச் சேர்ந்து.


தித்திக்கும் தேனாக திக்கெட்டும் பேசட்டும்
பெத்தென்னும் பெண்ணின் புகழ்.

அடுக்கான ஆங்கிலம் ஆழமாக்க ருத்து
கடுக்காத பெத்தின் கதை.

வெண்பா எழுத வெறுப்பென்ன தானுனக்கு
பண்பா எழுதப் பயன்தானே - நண்பாகேள்
உன்பால் பிரியமுண்டு உண்மையில் நீகூறு
என்பாவில் குற்றமென்ன என்று.

கண்போன்ற செந்தமிழை கேட்டுக் களித்திந்த
மண்போற்றும் காலம் மலரட்டும் - வெண்பாவை
மெய்யாகப் போற்றுமோர் மேலான நாள்வரும்
அய்யாநீ கொஞ்சம் அறி.

இலக்கணம் போதுமா இன்னோசை கூட
வலுவாய்க் கருத்தெல்லாம் வேண்டாமா வெற்றுப்
புலம்பலும்வெண் பாவா பகர்.

நாட்டுச் சரக்கூஉ நச்சுனு தானிருக்கு
கிட்டவந்து முட்டவந்தா கிண்ணுனு தானிருக்கு
பாட்டில் இலக்கணம் பாங்காகத் தானிருக்கு
பாட்டிது வெண்பாவா பார்.

விகிபீ டியாபார்த்து வெண்பா எழுத
தகுமா இதுசரி தானா – வெகுவா
தொல்காப் பியஞ்சொன்ன தெல்லாமே தண்டமா
இல்லையா கொஞ்சம் இயம்பு.

பிறப்பில் வளர்ப்பில் பொசுக்கும் வெய்யில்
வறுப்பில் குளிரின் விறைப்பில் தெறுவில்ஏன்
நொவ்வில் இறப்பிலும் நான்கருப்பு நீயோ
இவ்வுலகில் உள்ளநிறம் எல்லாமும் பெற்றாய்
பிறக்கையில் பூஞ்சை பிறகு வளர
உறுவதோ வெள்ளைத்தோல் வெய்யில் வறுக்க
குருதிபோல் செம்மை குளிரிலோ நீலம்
மருளவும் நொவ்விலும் மஞ்சள் பசலை
அழிவில் வெளிறினாய் இன்றென்னைக் காட்டிக்
கெழிறென்றாய் என்னே கொழுப்பு.

இருள்நீக்கும் எல்லனே எல்லோர்க்கும் நல்லாய்
மருளாதோர் ஆணை மொழிந்தேன் - அருள்மழையை
நெல்புல் தழைக்கச்செய் நீரின் தன்மைபோல்
புல்புல் தழைக்கப் பொழி.

பதின்மூன்று வெள்ளியின்பாற் பட்டுவரும் நாட்கள்
அதுவாண்டில் எத்தனை ஈண்டருகும் என்ன
பதின்மூன்று ரோமத்தில் பாங்காய் எழுத
பதிலாக நிற்கும் பிரிந்து.

பொன்னம்மா கேட்ட புதிரிலே உள்ளவர்
அன்னம் இனியாவும் ஆதிரையும் - அன்னையின்
அன்புடைய பெண்கள் அவர்கள் வயதோ
ஒன்பஃது இரண்டோடு இரண்டு.

அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
அருக்கணுமே மூன்றாய் அவற்றை - வருகும்
முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.

அனைத்திற்கும் மேலான ஆசானைக் காணத்
தனியாக வந்தவரும் தானில் - எனக்கூறின்
விண்ணவன் ஈசன் வழிவந்த மக்களின்
கண்களை நீஎண்ணிக் கொள்.

அல்பகாப் பற்றி அழகாய் விளக்கமும்
நல்ல படங்கள் நாலைந்தும்! சொல்லும்
திறன்மிக நன்று.உன் திறமை வளர்ந்து
சிறக்கட்டும் நன்மை சேர்ந்து.

ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்
காயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை
தீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம்
தாங்காமல் கண்ணீர் தரும்.

செல்லத் தமிழினி சாகாது இனிமேலே
எல்லாம் தமிழென்றே ஆகுமே – நல்லோனே
வெல்லத் தமிழ்பாட வந்தோமே நாமெல்லாம்
மெல்லத் தமிழ்வாழும் மன்

யாவும் அறிமொழியாம் இன்தமிழ் கொண்டொருவெண்
பாவில் விடுகதையும் பாடினை - ஆவும்
குதிரயும் கேளேன் கவிபாடி நின்றேன்
பதிலெனத் தாராய் பரிசு

காதலால் வாய்த்த கவிகள் பலவுண்டு
காதலால் மாய்ந்த கவிகளும் இங்குண்டு
காதலால் என்ற கருத்துண்டிங் கென்தனக்
காதலால் சென்றேன் கழன்று.

பொல்லாத் தமிழின் பெருமை எதுவெனில்
எல்லாக் கவிதையும் யாப்பில் அடங்கும்
கல்லாதான் கற்ற கவிபற்றிச் சொன்னவள்
சொல்லாதது ஒன்றுண்டோ சொல்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org